அரசுப் பணியாளர்களின் திறனை மேம்படுத்த கர்மயோகி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் கர்மயோகி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், ``மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், கர்மயோகி திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டில் இந்தத் திட்டம் முக்கிய சீர்த்திருத்தமாக இருக்கும். இதற்காக பிரதமர் தலைமையில் மாநில முதல்வர்கள் உறுப்பினர்களாக இருக்கும் ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது. இது, பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும். பிரதமர் மோடி அளித்த ஆலோசனையின் பேரில் இந்த உன்னதமான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், அரசு பணியாளர்கள், அதிகாரிகள் பணி நியமனம் செய்யப்பட்ட பிறகு, அவர்கள் தங்களின் பணித்திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும்,’’ என்றார்.

* காஷ்மீர் மக்களின் ஆசை நிறைவேறியது

ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக டோக்ரி, காஷ்மீரி ஆகியவற்றை சேர்க்கும்படி, இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜம்மு காஷ்மீரின் அலுவல் மொழியாக தற்போதுள்ள உருது மற்றும் ஆங்கிலம் தவிர, டோக்ரி, காஷ்மீரி ஆகியவற்றையும் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: