உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம்

லக்னோ: உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கபீல் கானின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கபீல் கான் 8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் விதமாக உரையாற்றியதாக மருத்துவர் கபீல் கான் மீது அலிகர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜனவரி 29ம் தேதி உத்தரப்பிரதேச அரசின் சிறப்புப் நடவடிக்கைப் படை அவரை மும்பையில் கைது செய்தது. பின்னர் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, கபீல் கான் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து கபீல் கானின் தாய் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, கபீல் கானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் கபீல் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உத்திரபிரதேச போலீசாருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: