ஜெயலலிதா வீட்டுக்கு எதிரில் உள்ள போயஸ் கார்டன் பங்களா உட்பட பினாமி பெயரில் வாங்கி குவித்த சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்: வருமான வரித்துறை அதிரடி

சென்னை: ஜெயலலிதா தோழியான சசிகலா பினாமி பெயர்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாங்கி குவித்த ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சசிகலா தனது அதிகார பலத்தை பயன்படுத்தி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் தன் பெயரிலும், தனது அக்கா மகன்கள், தம்பி என குடும்பத்தினர் பெயர்களிலும் கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்து இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைதொடர்ந்து கடந்த 1996ம் ஆண்டு வருமானவரித்துறை ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு பல வருடங்களாக  நீதிமன்றங்களில் நடந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். தொடர்ந்து, சசிகலா முதல்வராக ஆசைப்பட்டு அதிமுக பொதுசெயலாளராக தன்னை தானே நியமித்துக்கொண்டார். இது பிடிக்காமல் அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ் சசிகலாவிடம் இருந்து பிரிந்து வெளியே வந்தார். பின்னர் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்குள், சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, சசிகலா சிறைக்கு சென்று தண்டனை அனுபவித்து வருகிறார். சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு சென்றார். ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற சில மாதங்களிலேயே பிரிந்து கிடந்த ஓபிஎஸ்-இபிஎஸ் ஒன்றாக இணைந்தனர்.

தொடர்ந்து சசிகலா குடும்பத்தையே அதிமுகவில் இருந்து நீக்கினர். இதை தொடர்ந்து, போயஸ் கார்டன் வீடு, சசிகலாவுக்கு சொந்தமான இடம் என பல இடங்களில்  2017 நவம்பர் 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, ஸ்பெக்ட்ரம் மால் மற்றும்  சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகள் என 187 இடங்களில் சோதனை நடந்தது.

கணக்கில் வராத பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள், வங்கி கணக்குகள், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாங்கி குவிக்கப்பட்ட அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் ரூ.4,500 கோடிக்கு சொத்துகள் கண்டறியப்பட்டது. பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், சென்னையில் உள்ள கங்கா பவுண்டேசன், கோயம்பத்தூர் செந்தில் பேப்பர் நிறுவனம், புதுச்சேரி மாநிலத்தில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமான ரிசார்ட் என மொத்தம் ரூ.1600 கோடி மதிப்பில் சொத்துகளை பினாமி பெயரில் வாங்கி குவித்தது தெரியவந்தது. இந்நிலையில், தற்போது சிறையில் இருக்கும் சசிகலா, தண்டனை முடிந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வரப்போவதாக கூறப்படுகிறது.

அவர் வந்ததும் தங்குவதற்காக போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் எதிரே மிகப்பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் சகிகலா 2003-2005ம் ஆண்டுகளில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பினாமிகள் பெயர்களில் பல கோடிகளில் சொத்துகள் வாங்கி குவித்து இருந்தது உறுதியானது. ஆலந்தூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்பத்தூர், போயஸ் கார்டனில் 24 ஆயிரம் சதுரடியில் உள்ள பங்களா என ரூ.300 கோடி மதிப்பில் 65 சொத்துகள் 200 ஏக்கரில் பினாமிகளின் பெயரிகளில் வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது.

சசிகலாவின் பினாமி நிறுவனமான ஹரிசந்தனா எஸ்டேட் பிரைவேட் லிமிடட் ஐதராபாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் பெயர்களில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் சசிகலாவின் பினாமி என்பதும், இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டதிலிருந்து இதன் பெயரில் எந்த வருமானமும் இல்லை என்று கூறப்படுகிறது. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா பினாமி பெயர்களில் வாங்கி குவித்துள்ள ₹300 கோடி மதிப்பு, 200 ஏக்கர் 65 சொத்துகளை வருமான வரித்துறை தற்போது முடக்கியுள்ளது. மேலும் இதற்கான ஆவணங்களை டெல்லிக்கு அனுப்பி, மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் சொத்து முடக்கியது தொடர்பாக கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அடுத்ததாக இந்த நோட்டீசுக்கு சசிகலா தரப்பில் பதிலளிக்கப்படும். தற்போது சசிகலா வெளியே வந்ததும், தங்குவதற்காக போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வந்த வீடு என பல சொத்துகளை முடக்கியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: