வேண்டுமென்றே திருப்பி செலுத்தவில்லை ஏ.சி.முத்தையா ரூ.508.4 கோடி கடன் மோசடி: ஐடிபிஐ வங்கி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபரான ஏ.சி.முத்தையா, ரூ.508.4 கோடி கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக ஐடிபிஐ வங்கி அறிவித்துள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பெரிய தொழிலதிபர்கள் வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடனை வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். திருப்பி செலுத்தும் வசதி இருந்தும் வேண்டுமென்றே இவர்கள் மோசடி செய்ததால், வங்கிகளில் வராக்கடன் அதிகமாகி வருகிறது. இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா.

எம்ஏசி குழு நிறுவனங்களின் முன்னாள் தலைவரான இவர், தமிழகத்தின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி தலைவராக உள்ளார். இவர் கடன் மோசடி செய்ததாக ஐடிபிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட் லீசிங் கம்பெனியின் தலைவராக ஏ.சி.முத்தையா இருந்துள்ளார். இந்த நிறுவனத்தின் புரமோட்டர்களாக ஏசி முத்தையா மற்றும் பரூக் இரானி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நிலவரப்படி, இந்த நிறுவனம் வாங்கிய ரூ.508.4 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை. எனவே, இவர்கள் இருவரும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறிய கடனாளி என ஐடிபிஐ வங்கி அறிவிப்பில் கூறியுள்ளது.

நிறுவனத்துக்கு வாங்கிய மேற்கண்ட கடன் தொகையை வேறு வகையில் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபரான ஏ.சி.முத்தையா கடன் மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, ஏ.சி.முத்தையா மற்றும் இரானி ஆகிய இருவரும் சிண்டிகேட் வங்கிக்கு 102.87 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ 2018ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: