இங்கிலாந்தில் மர்ம நபர்கள் அட்டகாசம் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் கல்லறை இடிப்பு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

கூடலூர்: பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் கல்லறை இங்கிலாந்து நாட்டில் மர்மநபர்களால் இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக திகழ்வது பெரியாறு அணை. இந்த அணையை இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் பென்னிகுக், தனது சொத்துக்களை விற்று கடந்த 1895ல் கட்டி முடித்தார். 1903ல் இங்கிலாந்து திரும்பிய அவர், அணைக்காக சொத்துகள் அனைத்தையும் விற்று செலவு செய்ததால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார். அங்கு அரசு அளித்த தொகுப்பு வீட்டில் தன் இறுதி நாட்களை மனைவி, பிள்ளைகளுடன் கழித்தார். 1911, மார்ச் 9ல் காலமானார்.

இந்நிலையில், லண்டனில் மேற்படிப்பிற்காக சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன பீர்ஒலி, கடந்த 2017ல் இங்கிலாந்தின் சர்ரே மாவட்டத்தில் கேம்பர்லி நகரில், செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் இருந்த நூற்றாண்டு பழமையான பென்னிகுக் கல்லறையை தேடி கண்டுபிடித்தார். பழுதடைந்த நிலையிலிருந்த இந்த கல்லறையை புதுப்பிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். தேவாலய அதிகாரிகளின் ஒப்புதலோடு கல்லறை புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆக. 29ம் தேதி பென்னிகுக்கின் கல்லறை பீடத்தை மர்ம நபர்கள் சிலர் இடித்துள்ளனர். இதுகுறித்து தேவாலய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் சர்ரே மாவட்ட போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இங்கிலாந்தில் பென்னிகுக் கல்லறை இடிக்கப்பட்ட சம்பவம் தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories: