ஆரணி ஆற்று பாலத்தில் அசுத்தமாக கிடக்கும் நடைபாதை: துர்நாற்றத்தால் பாதசாரிகள் அவதி

ஊத்துக்கோட்டை: சென்னை - திருப்பதி சாலையில் பெரியபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆரணி ஆற்றின் கரை ஓரத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும், சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆரணி ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை கடந்து தான் கோயிலுக்கு செல்லவேண்டும், இந்த பாலம் பவானி அம்மன் கோயிலை இணைக்கும் முக்கிய பாலமாகும். மேலும், சென்னையிலிருந்து திருப்பதி, புத்தூர் செல்பவர்களும் பெரியபாளையம் தரைப்பாலத்தை கடந்து தான் செல்வர்.

இந்நிலையில், பெரியபாளையம் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த திமுக ஆட்சியில் 1999ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது. அதன்பிறகு மக்களும், பக்தர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையில், இந்த பாலத்தின் அருகில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து மீன், கோழி போன்ற இறைச்சி கழிவுகளை பாலத்தின் கீழ் கொட்டுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த பாலத்தின் நடைபாதையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் அசுத்தம் செய்கிறது. இதனால் இந்த பாலத்தை பயன்படுத்தும் மக்களும் நடைபாதையில் செல்லாமல் பாலத்தின் நடுவில் செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாலத்தின் நடைபாதையை சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: