திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத இருளர் பழங்குடியினர் குடியிருப்பு: விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில், இருளர் பழங்குடியினர் குடியிருப்பு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனை சீரமைத்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. திருப்போரூர் ஒன்றியம் செம்பாக்கம் கிராமத்தில் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 54 குடும்பத்தினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, சாலையோரங்களிலும், மலையடிவாரங்களிலும் வசித்து வந்த இருளர் பழங்குடி மக்கள் செம்பாக்கம் கிராமத்தில் வழங்கப்பட்ட மனைப்பிரிவில் குடிசை வீடு கட்டி குடியேற தொடங்கினர்.

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டாலும், இதுவரை சாலை, தெரு மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இந்த குடியிருப்பில் வழங்கவில்லை. இதனால், 20 இருளர் குடும்பங்கள் மட்டுமே இங்கு நிரந்தரமாக வீட்டி கட்டி குடியேறியுள்ளனர். வீடு கட்டி குடியேறியும் மின் இணைப்பு இல்லாததால், இங்குள்ள மக்கள், இருளில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குடியிருப்பை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளதால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

அதேபோன்று இந்த குடியிருப்புக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் இதுவரை சாலை, தெருமின் விளக்கு, குடிநீர் வசதிகளும் செய்து தரவில்லை. இதற்கிடையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து, தற்காலிகமாக குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், வாழ வழி கிடைத்தும் நிம்மதியாக வாழ முடியாத நிலை இருளர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, செம்பாக்கம் கிராமத்தில் இருளர் குடியிருப்புக்கு அடிப்படை தேவையான சாலை, தெரு மின் விளக்கு, குடிநீர், வீட்டு மின் இணைப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: