கருப்பின போராட்டக்காரர்கள் - டிரம்ப் ஆதரவாளர்கள் மோதல் வன்முறை களமாகும் அமெரிக்க தேர்தல்: போர்களமானது போர்ட்லாந்து: ஒருவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் களம், முன்பு எப்போதும் இல்லாத வகையில் போராட்டக்களமாக மாறி இருக்கிறது. போர்ட்லாந்தில் கருப்பின மக்களுக்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தார். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த 46 வயதான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், போலீஸ் அதிகாரியால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டார்.

இதை எதிர்த்து கடந்த 3 மாதங்களாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள கனோஷா என்ற இடத்தில் ஜேக்கப் பிளேக் (26) என்ற கருப்பின வாலிபரை போலீசார் 7 முறை துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயமடைந்தார். இதனால், கருப்பின மக்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டம் மேலும் தீவிரமாகி இருக்கிறது.

இந்த போராட்டங்கள், அதிபர் தேர்தலில் 2வது முறையாக போட்டியிடும் டிரம்ப்பின் வாக்கு வங்கியை கடுமையாக பாதித்து வருகிறது. ஏற்கனவே, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடெனுக்கும், துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசுக்கும் ஆதரவு பெருகி வருகிறது. இவர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், டிரம்ப் தனது பிரசாரத்தை அதிதீவிரமாக்கி இருக்கிறார். மேலும், பிடென் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் வன்முறை அதிகமாகி விடும் என்று எச்சரித்தும் வருகிறார்.

இந்நிலையில், பிளாய்ட் படுகொலைக்கு எதிராக போர்ட்லாந்தில் தொடர்ந்து 3 மாதங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன் நடந்த குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய டிரம்ப், ‘வன்முறையால் சூழப்பட்ட நகரமாக போர்ட்லாந்து மாறி வருகிறது,’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் 600 வாகனங்களில் போர்ட்லாந்தின் மையப்பகுதிக்குள் பேரணியாக நுழைந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் சாலையின் குறுக்கே நின்றும், பாலங்களில் தடுப்பு ஏற்படுத்தியும் பேரணியை தடுத்தனர். இதைத் தொடர்ந்து, டிரம்ப் ஆதரவாளர்கள் - போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பும் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.

வாகனங்கள் எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் நகரத்திற்குள் வரவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில், தென்கிழக்கு ஆல்டர் தெருவில் துப்பாக்கியால் சுடும் த்தம் கேட்டது. போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு, மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் விழுந்து கிடந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் அவர் இறந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார் என்பது தெரியவில்லை. போலீசார் யாராவது செய்தார்களா? மோதலில் ஈடுபட்டவர்கள் சுட்டார்களா? என விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதலில் இருதரப்பையும் சேர்ந்த பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* பேஸ்புக் தவறு செய்து விட்டது...

கனோஷாவில் கருப்பின வாலிபர் பிளேக்கை போலீசார் சுட்டதை கண்டித்து, அங்கு போராட்டம் தீவிரமாகி இருக்கிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆயுதங்களுடன் வந்து போராட்டத்தில் பங்கேற்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுக்கும் பதிவு ஒன்று பேஸ்புக்கில் பதிவிடப்பட்டது. இந்நிலையில்தான், போர்ட்லாந்தில் நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்த சர்ச்சைக்குரிய பதிவை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நீக்கியது. இது பற்றி பேஸ்புக் தலைமை செயல் அதிகார மார்க் ஜுகர்பெர்க் வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘கெனோஷா பாதுகாவலர்’ என்ற அந்த பதிவானது, பேஸ்புக் விதிமுறைகளை மீறியது. இந்த விஷயத்தில் பேஸ்புக் தவறிழைத்து விட்டது. இந்த பதிவு தற்போது,  நீக்கப்பட்டுள்ளது,” என்றார். ஆனால், இந்த தவறுக்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

* கனோஷா செல்கிறார்

விஸ்கான்சின் மாகாணம், கனோஷாவில் கருப்பின வாலிபர் ஜேக்கப் பிளேக்கின் (29) முதுகில் போலீசார் 7 முறை சுட்டதால், அவர் படுகாயம் அடைந்தார். இருப்பினும், தீவிர சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்து விட்டார். இச்சம்பவத்தை கண்டித்து அங்கும் கருப்பின மக்களும், ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தி வருவதால் அங்கும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த பகுதியை பார்வையிடுவதற்காக டிரம்ப் அங்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவரை எதிர்த்து போராட்டம் தீவிரமாகலாம் என அஞ்சப்படுகிறது.

Related Stories: