ஆன்லைனில் பெட்ஷீட் வாங்கியவருக்கு கார் பரிசு விழுந்துள்ளதாக பணம் பறிக்க முயற்சி: ஆசாமிக்கு வலை

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் (38) என்பவர், கடந்த மாதம் ஆன்லைனில் ரூ.350 மதிப்புள்ள பெட்ஷீட் ஆர்டர் செய்து வாங்கினார். சில நாட்களில் இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘நான், தனியார் நிறுவன உதவி மேலாளர் சுஜித். ஆன்லைனில் நீங்கள் வாங்கிய பெட்ஷீட்டுக்கு சுமார் 13 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைத்துள்ளது. அதன் விவரங்களை உங்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி உள்ளேன்,’’ என்றார். அதன்படி, சுரேஷின் வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய கார் ஒன்றின் படம் மற்றும் போனில் பேசிய நபரின் அடையாள அட்டை நகல் ஆகியவை வந்திருந்தது.

மீண்டும் சுரேஷை தொடர்புகொண்ட அந்த நபர், ‘‘புதிய காரின் மதிப்புக்கு முதலில் ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டும். நான் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணில் ரூ.12,800 செலுத்துங்கள். கார் வேண்டாம் என்றால், அந்த காரின் மதிப்புக்கு பணமாக பெற்றுக்கொள்ளலாம்,’’ என ஆசை வார்த்தை கூறியுள்ளார். சந்தேகமடைந்த சுரேஷ், இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசிபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னுடன் பேசுவது போலீசார் என தெரிந்ததும் இணைப்பை துண்டித்துவிட்டு, செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அப்போதுதான் தன்னிடம் பேசிய நபர் மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர் என்பது சுரேசுக்கு தெரியவந்தது. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: