கன்னியாகுமரி அருகே மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் - துறைமுகத்திற்கு சாலை அமைத்து தர கோரிக்கை

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டம் இறையம்மன்துறை கிராமத்தில் துறைமுகத்திற்கு மாற்று சாலை அமைக்கக்கோரி மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சுமார் ஓராண்டுக்கு முன் திறக்கப்பட்டன. இந்நிலையில், ஆற்றின் மறுகரையில் உள்ள இறங்குதுறை பகுதியில் சில மாதங்களாக மீன் விற்பனையானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இறையம்மன்துறை மீன் விற்பனை மையத்திற்கு சாலை வசதி ஏதும் இதுவரை செய்துதரவில்லை. இதனால் ஊரின் குறுகலான வழியில் கனரக வாகனங்கள் செல்வதால், சாலைகள் சேதமடைவதுடன், வீடுகளிலும் விரிசல் விழுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பல வீடுகள் இதுவரை இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் உடனடியாக மாற்று சாலை அமைத்துத்தர வேண்டும், கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவுகளை வடிவடிமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 பேர் இறையம்மன்துறை தேவாலய வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் மீன் விற்பனை மையத்தில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: