ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் 6ம் முறையாக பேயர்ன் மியூனிக் சாம்பியன்: பிஎஸ்ஜி ஏமாற்றம்

லிஸ்பன்: யுஇஎப்ஏ ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலில் பிஎஸ்ஜி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பேயர்ன் மியூனிக் 6வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள லஸ் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் ஜெர்மனியின் பண்டெஸ்லிகா சாம்பியன் பேயர்ன் மியூனிக்,  பிரான்சின் லீக் ஒன் சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிகள் மோதின. யுஇஎப்ஏ வரலாற்றில் முதல்முறையாக பைனலுக்கு முன்னேறிய பிஎஸ்ஜி அணி, 5 முறை சாம்பியனும் 11வது முறையாக பைனலில் விளையாடும் பேயர்ன் மியூனிக்கின் சவாலை எதிர்கொண்டது. பெரும்பாலான நேரம் பந்து பேயர்ன் வீரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இடைவேளையின்போது இரு அணிகளும் 0-0 என சமநிலை வகித்தன.

2வது பாதியிலும் துடிப்புடன் விளையாடி நெருக்கடி கொடுத்த பேயர்ன் அணிக்கு கிங்ஸ்லி காமன் 59வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.  சக வீரர் ஜோஸ்வா கிம்மிச் அடித்த பந்தை கிங்ஸ்லி தலையால் முட்டி கோலாக்கினார். பதில் கோல் அடிக்க பிஎஸ்ஜி கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மியூனிக் வெற்றிப் பெற்றது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத அணி, தொடர்ந்து 11 போட்டிகளில் வென்ற அணி என்ற பெருமையுடன் பேயர்ன் அணி 6வது முறையாக கோப்பையையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக கிங்ஸ்லி தேர்வு செய்யப்பட்டார். அரையிறுதியில் விளையாடாத கிங்ஸ்லி காமன், பைனலில் களமிறங்கி வெற்றி கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் ஏற்கனவே பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி இருக்கிறார்.

* பாரிசில் கலவரம்

சாம்பியன்ஸ் லீக் பைனலில் பிரான்சை சேர்ந்த பிஎஸ்ஜி அணி தோல்வி அடைந்ததால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் சுமார் 5000 பேர் பாரிஸ் நகரில் கலவரத்தில் ஈடுபட்டனர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகின. நள்ளிரவில் தொடங்கிய கலவரம் நேற்று காலை வரை தொடர்ந்தது. கலவரத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே அரையிறுதியில் பிரான்சின் ஒலிம்பிக்யூ லியோன் அணி, பேயர்ன் அணியிடம் தோற்றதும் கலவரம் நடந்தது. அதனால் பைனலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. ஆனாலும் உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. கால்பந்து போட்டியின் மீது தீவிர ஆர்வம் கொண்ட ரசிகர்கள், ஐரோப்பிய நாடுகளில் அதிகம். தங்களின் விருப்ப அணி தோல்வி அடையும்போது அரங்கிலும், வெளியேயும் மோதலில், கலவரங்களில் ஈடுபடுவது வாடிக்கை.

Related Stories: