சீனாவுடனான எல்லைத் தகராறு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை பரிசீலிக்கப்படும்: பிபின் ராவத்

புதுடெல்லி: சீனாவுடனான எல்லைத் தகராறு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கை பரிசீலிக்கப்படும் என முப்படை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளதாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இந்த ஆக்கிரமிப்பு முயற்சியை நமது ராணுவ வீரர்கள் தீரமுடன் முறியடித்தனர். இதில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து எல்லை பதற்றத்தைத் தொடர்ந்து இருநாடுகளின் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கை பரிசீலிக்கப்படும் என முப்படை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அத்துமீறல்கள், ஊடுருவல்களை தடுப்பதும், அத்தகைய பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதுமே அரசின் அணுகுமுறை. கிழக்கு லடாக் எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை மீட்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பரிசீலித்து வருகின்றனர், என கூறியுள்ளார். மேலும், எல்லை விவகாரத்தில் உளவு அமைப்புகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்ற கருத்தையும் அவர் மறுத்துள்ளார். லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை முறியடிக்க ராணுவ நடவடிக்கை என்ற வாய்ப்பும் உள்ளது என தெரிவித்துள்ள அவர், ராணுவ நிலையிலும் அரசு நிலையிலும் நடைபெறும் பேச்சுகள் பலனளிக்கவில்லை என்றால் மட்டுமே அந்த வாய்ப்பு பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார்.

Related Stories: