ஜனநாயக கட்சியின் பக்கம் சாயும் இந்தியர்களை கவர மோடியுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு டிரம்ப் ஓட்டு வேட்டை

வாஷிங்டன் : அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளை கவர, பிரதமர் மோடியுடன் கைகோர்த்து நடக்கும் காட்சிகளுடன் அதிபர் டிரம்ப் தனது முதல் பிரசார விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளை கவர அதிபர் டிரம்ப் முதல் பிரசார விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார். 107 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ, கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது ஹூஸ்டனில் பங்கேற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் இருந்து தொடங்குகிறது. பிரதமர் மோடியும், டிரம்ப்பும் கைகோர்த்தபடி மக்களை பார்த்தபடி நடந்து செல்லும் காட்சிகள் காட்டப்படுகின்றன.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, டிரம்ப்பை புகழ்ந்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக கடந்த பிப்ரவரியில் டிரம்ப் தனது இந்திய பயணத்தின் போது அகமாதாபாத்தில் பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்றார். 1 லட்சம் பேர் பங்கேற்ற இக்கூட்டத்தில், ‘எனது குடும்பத்தில் ஒருவர் டிரம்ப்’ என்ற மோடியின் பேச்சுகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. அதோடு ‘இந்தியாவை நேசிக்கிறது, மதிக்கிறது அமெரிக்கா. இந்திய மக்களுக்கு நம்பகமான நெருங்கிய தோழன் அமெரிக்கா. அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஏராளமான இந்திய வம்சாவளிகள் துணை புரிந்துள்ளனர். அவர்கள் உண்மையில் மிகச்சிறந்தவர்கள்’ என்ற டிரம்ப்பின் பேச்சும் இடம் பெற்றுள்ளது.

இந்த விளம்பர வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட டிரம்ப்பின் நிதி கமிட்டி தலைவர் கிம்பர்லி கைல்போயல் தனது பதிவில், ‘இந்தியாவுடன் அமெரிக்கா நெருக்கமான நல்லுறவை கொண்டுள்ளது. எங்கள் பிரசாரத்திற்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உள்ளது,’’ என்றார். இந்திய வம்சாவளிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு வகித்து வரும் டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்ப் தனது டிவிட்டரில், ‘விளம்பர வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்திலேயே 66,000 பார்வையாளர்களுடன் வைரலாகி உள்ளது,’ என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ ‘இன்னும் நான்கு ஆண்டுகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும் 27ம் தேதி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் முறைப்படி அறிவிக்கப்படுகிறார். அதை ஏற்று அவர் நிகழ்த்த உள்ள உரையில், இந்திய அமெரிக்கர்களை கவரும் வகையில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் 20 லட்சம் இந்தியர்கள் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர்.அவர்களின் ஓட்டு இம்முறை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளன.

 எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பிறகு  பெரும்பாலான இந்தியர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், அவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார். அதே சமயம் டிரம்ப்புக்கு போட்டியாக இந்திய அமெரிக்கர்களை கவரும் வகையில் பாலிவுட் ஸ்டைலில் ஜனநாயக கட்சியும் புதிய விளம்பர வீடியோவை தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் 70 நாள் பிரசாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபாச  பட நடிகைக்கு ₹33 லட்சம் தர உத்தரவு

கடந்த 2016 அதிபர் தேர்தலின் போது டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். டிரம்ப் பலமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாகவும் தேர்தல் சமயத்தில் அதை வெளியிடாமல் இருக்க, அவரது வக்கீல் தனக்கு ₹92 லட்சம் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும் கூறினார். இதை டிரம்ப் மறுத்தார். இதுதொடர்பான வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, தனக்கு வக்கீல் செலவு நிதி கோரி கலிபோர்னியா நீதிமன்றத்தில் டேனியல் மனு செய்தார். இந்த வழக்கில் ஒரு வாரத்தில் டிரம்ப் ₹33 லட்சத்தை டேனியலுக்கு தர உத்தரவிடப்பட்டுள்ளது

Related Stories: