9 மாதங்களுக்கு பிறகு களத்தில் ஆண்டி மர்ரே

நியூயார்க்: கொரோனாவால் ஊரடங்கு மற்றும் காயம் காரணமாக கடந்த 9மாதங்களாக விளையாடாமல் இருந்த இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரே மீண்டும் களம் கண்டதுடன், கூடவே வெற்றியையும் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து டென்னிஸ் நட்சத்திரம் ஆண்டி மர்ரே (33). விம்பிள்டன் உட்பட 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இவருக்கு இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதனால் கடந்த ஆண்டு நவம்பருக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார். உடல் நலம் மீண்டாலும், கொரோனா பரவல், அதனால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக போட்டிகள் நடைபெறாததால் மீண்டும் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற இருந்த முக்கிய கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் தள்ளி வைக்கப்பட்டது. பிரஞ்ச் ஓபனும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல் தள்ளிவைக்கப்பட்ட யுஎஸ் ஓபன் போட்டியும் இம்மாதம் 31ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா பரவலில் சிக்கித்தவிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் அமெரிக்காவின் நியூயார்க்  நகரில் நடைபெற உள்ள யுஎஸ் ஓபன் போட்டியில் பங்கேற்க நடப்பு சாம்பியன்கள் ரபேல் நடால், பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) உட்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் பலரும் மறுத்து விட்டனர்.

ஆன்டி மர்ரேவும் முதலில் யுஎஸ் ஓபனில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே கூறியிருந்தார். ஆனால் இப்போது நியூயார்க் சென்றுள்ளார் மர்ரே. அங்கு யுஎஸ் ஓபனுக்கு முன்னதாக நடைபெறும் மேற்கு-தெற்கு ஓபன் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்தப்போட்டி ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கில் நடக்கிறது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு சர்வதேச அளவிலான ஏடிபி போட்டியில் மர்ரே விளையாடுகிறார். அதுமட்டுமல்ல நேற்று நடைபெற்ற முதல் சுற்றில்  அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ (22) உடன் மோதிய அவர் 7-6, 6-3,6-1 என்ற நேர் செட்களில் முதல் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து 2வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (23) உடன் மோத உள்ளார்.

* நியூயார்க்கில் ஜோகோவிச்

டென்னிஸ் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவாக் ஜோகோவிச் (செர்பியா) ஆரம்பம் முதலே யுஎஸ் ஓபனில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வந்தார். கொரோனா பீதிக்கு இடையில்  செர்பியாவில் அவர் நடத்திய டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்றனர். அவர்களில் ஜோகோவிச் உட்பட பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அதனால் அவர் யுஎஸ் ஓபனில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், கொரோனாவில் இருந்து குணமான ஜோகோவிச் இப்போது  நியூயார்க் போய் சேர்ந்துள்ளார். அங்கு ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related Stories: