சென்னை: கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் விலையை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடி வரை செலவாகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜிவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கேட்டறிந்த வகையில் முதலமைச்சரின் கணக்கின் மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. ராஜிவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலையில் 2 இட்லி, ஒரு சிறிய ஊத்தப்பம், மதியம் காய்கறி கூட்டு, சிறிது சாம்பார், சிறுசிறு அப்பளம் ஆகியவை உள்ளடங்கிய அளவு சாதம், இரவு மீண்டும் 2 இட்லி, சிறிய ஊத்தப்பம் ஒன்று என வழங்கப்படுவதாக தெரிகிறது.