பெரியகுளம் அருகே கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பொருட்கள் விவசாய நிலங்களில் குவிப்பு: குழி தோண்டி புதைக்க விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம் பெரியகுளம் அருகே, கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை விவசாய நிலங்களில் குவிப்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவைகளை குழி தோண்டி புதைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் அருகே, நல்லகருப்பன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவு உள்ளது. இங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் கழிவுகள், அவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம், சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள், மருத்துவர்களின் கவச உடைகள் உள்ளிட்ட அனைத்து கழிவு பொருட்களையும் அருகில் உள்ள விளைநிலங்களில் குவித்து வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் விவசாய வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வேலைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும், அங்கு கொட்டப்படும் உணவுப்பொருட்களை தெரு நாய்கள் சாப்பிட்டுவிட்டு, அவைகள் தெருக்களில் மக்களோடு மக்களாக சுற்றித்திரிவதால், அவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பறவைகள், வனவிலங்குகள் அந்த உணவு கழிவுகளை சாப்பிடுகின்றன. எனவே, கொரோனா கழிவுகளை குழி தோண்டி அழிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: