திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார்மயம் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கேரளாவில் கட்சிகள் கொந்தளிப்பு: ஐகோர்ட்டில் மாநில அரசு வழக்கு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய  அரசின் முடிவுக்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த முடிவுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு  தொடர்ந்துள்ளது. திருவனந்தபுரம் உள்பட 3 விமான நிலையங்களை அதானி  நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு தீரமானித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு  கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த முடிவை கைவிடும்படி பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராய்  விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று  முன்தினம் முதல்வர் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து கட்சி  கூட்டம் நடந்தது. கூட்டத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை  தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே கேரள அரசு நடத்தி  வரும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  இதுதொடர்பாக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றவும்  தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய பினராய் விஜயன், ‘‘விமான  நிலையத்தை நடத்துவது யாராக இருந்தாலும், பொதுத்துறை நடத்தும் விமான  நிலையங்களுக்கு அளிப்பது போன்ற ஒத்துழைப்பை தனியார் நடத்தும் விமான  நிலையங்களுக்கு அளிக்க முடியாது.

எனவே, கேரள அரசின் எதிர்ப்பை மீறி எந்த  நிறுவனமும் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நடத்த முன் வராது என்றே  கருதுகிறேன். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர  வேண்டும்,’’ என்று பேசினார். இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்துக்கு கொடுப்பதற்கான மத்திய அரசின்  முடிவிற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு நேற்று வழக்கு  தொடர்ந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு  வரும் என்று தெரிகிறது.

7 நாள் தனிமை முடிந்தது

கேரள மாநிலம்,  கோழிக்கோட்டில் விமான விபத்து  நடந்த இடத்தில், மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த மலப்புரம் மாவட்ட  கலெக்டர்  கோபால கிருஷ்ணன், எஸ்பி ஹரீம் உட்பட 25க்கும்  மேற்பட்ட  அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து,   அவர்களுடன் சென்ற முதல்வர் பினராய் விஜயன், சபாநாயகர் ராமகிருஷ்ணன்  மற்றும் 7 அமைச்சர்களும், தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர். நேற்று முன்தினத்துடன் இவர்களின் 7 நாள் தனிமைக்காலம்  முடிந்தது.  இதையடுத்து, நேற்று முதல் பினராய் உட்பட இவர்கள் அனைவரும் தங்கள் அலுவலகத்துக்கு சென்று பணிகளை தொடங்கினர்.

Related Stories: