நாங்குநேரி பெரியகுளம் மடை சீரமைப்பு துவக்கம் நீராழியில் செத்து மிதக்கும் மீன்கள்

நாங்குநேரி :  நாங்குநேரி பெரியகுளத்தில் பாசன மடைகளை சீரமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் துவங்கியது. இதில் முதற்கட்டமாக பெருமாள் கோயில் அருகில் உள்ள கருடமடை  சீரமைக்கும்  பணி நடந்து வருகிறது. குளத்தின் உட்பகுதியில் இருந்து சுமார்  50 மீட்டர் நீளத்திற்கு பூமிக்கு அடியில் உள்ள பழங்கால நீராழி ஓடை பொக்லைன் மூலம் தோண்டப்படுகிறது. அதில் தரை மட்டத்திற்கு கீழ் செங்கல்  சுண்ணாம்பு கலவை மற்றும் கற்களால் சுமார் 3 அடி ஆழத்திற்கு கால்வாய் போன்ற  ஒரு அமைப்பு காணப்படுகிறது.

அதில் ஈரடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி  நிற்கிறது . குளத்தில் தண்ணீர் வற்றிய பின்பும் இந்த நீராழி ஓடையில்  தண்ணீர் இருப்பு உள்ளதால் அங்கு ஏராளமான தேளி மீன்கள் பதுங்கி இருந்து  நீண்ட காலம் உயிர் வாழ்வது தற்போது தெரிய வந்துள்ளது.  2 முதல் 3 அடி நீளம்  கொண்ட தேளி மீன்கள் சுமார் 5 முதல் 8 கிலோ வரைக்கும் எடை கொண்டதாக உள்ளது.  தற்போது நீராழி ஓடை கட்டுமானம் இடிக்கப்படுவதால் அதில் உள்ள தண்ணீர்  வெளியேற்றப்படுகிறது. இதனால் தேளி மீன்கள் செத்து மிதக்கின்றன.

மேலும் பல  நூறு மீன்கள் கூட்டம் கூட்டமாக சகதியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன  இந்த வகை மீனை அப்பகுதியினர் யாரும் விரும்பி உண்பதில்லை. எனவே வியாபாரிகள்  யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசத்  துவங்கியுள்ளன. குளத்தில் தண்ணீர் வற்றி இரு மாதங்களுக்கு மேல் ஆகியும்  பூமிக்கு அடியில் பதுங்கி இருந்த மீன்களை அப்பகுதியினர் ஆச்சரியத்துடன்  பார்த்து செல்கின்றனர்.

Related Stories: