சிஎஸ்கே இன்று யுஏஇ பயணம்: ஹர்பஜன் போகவில்லை

சென்னை: கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி செப்.19ம் தேதி யுஏஇயில் தொடங்குகிறது. அந்தப் போட்டியில் பங்கேற்க ஐபிஎல் அணிகள் சென்னை, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா நகரங்களில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றன. அவற்றில் முதல் அணியாக சிஎஸ்கே அணி இன்று சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் யுஏஇ செல்கிறது. அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா,அம்பாதி ராயுடு உள்ளிட்டோருடன் தமிழக வீரர்கள் முரளி விஜய், ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகியோரும் செல்கின்றனர். கூடவே பயிற்சியாளர்கள், சிஎஸ்கே அலுவலர்கள், உதவியாளர்கள் பெரும்படை யுஏஇ செல்கிறது.

ஆனால் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும், நட்சத்திர ஆட்டக்காரருமான ஹர்பஜன் சிங் (40) இன்று அணியுடன் செல்ல மாட்டார். அவருடைய தாயார் உடல்நலமில்லாமல் இருப்பதால் இப்போது தன்னால் யுஏஇ வர இயலவில்லை என்று அணி நிர்வாகத்திடம் ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இதே பிரச்னை காரணமாக, சென்னையில் நடைபெற்ற குறுகிய கால பயிற்சி முகாமிலும் ஹர்பஜன் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் 2 வாரங்களுக்கு பிறகு யுஏஇ சென்று அணியுடன் இணைய ஹர்பஜன் திட்டமிட்டுள்ளார். அடுத்தக் கட்ட பயிற்சி முகாம் யுஏஇயில் நடைபெறும். சிஎஸ்கே உள்ளிட்ட ஐபிஎல் வீரர்கள் யுஏஇ சென்றதும் அங்கு கொரோனா பரிசோதனை நடைபெறுவதுடன் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

Related Stories: