சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க புதிய முறை: காவல் ஆணையர் மகேஷ்குமார் அறிமுகப்படுத்தினார்

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வாகன ஓட்டிகளுக்கும் காவல்துறையினருக்கும், குறிப்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அபாரதங்களை வசூலிக்கும் போதெல்லாம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், குறிப்பாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இதில் பல்வேறு தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்து உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இந்த பிரச்சனையானது தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. குறிப்பாக போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தனர். இதன் அடிப்படையில் சென்னையில் முன்னாள் காவல் ஆணையர் விஸ்வநாதன் இருக்கும் போது இது டிஜிட்டல் மயமாக மாற்றப்படும் அப்போது தான் இது போன்ற லஞ்சம் வாங்குவது தடுக்கப்படும் என்ற அடிப்படையில் டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் முறையை கொண்டு வந்தார். அதன்பிறகும் இந்த பிரச்சனையானது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து எழுந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

குறிப்பாக இது போன்ற பிரச்சனைகளில் அதாவது; விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்களை அணுகும் போது அவர்கள் அரசியல் அதிகாரிகள், உயர் அதிகாரிகளின் அதிகாரத்தை பயன்படுத்தி வெளியே வருவதாகவும் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் அதிக அளவு பிரச்சனை ஏற்படுவதாக ஒரு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை காவல் ஆணையராக தற்போது பொறுப்பேற்றுள்ள மகேஷ்குமார் அகர்வால் புதியதாக அபராதம் விதிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளில் இருப்பது போன்று ஒரு வாகனம் தடையை மீறி அதாவது போக்குவரத்து விதிகளை மீறி எங்காவது நிறுத்தப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் அந்த வாகனத்தில் அபராதம் விதிக்கும் அபராத ரசீதை போக்குவரத்து காவலர்கள் ஒட்டிவிட்டு சென்றுவிடுவார்கள்.

அதன் பிறகு அந்த வாகன உரிமையாளர் அந்த அபராத தொகையை டிஜிட்டல் மயமாகவோ? அஞ்சலகத்திலோ சென்று கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகள் தவிர்க்கப்படும் எனவும் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது தவிர்க்கப்படும் எனவும், அதே நேரத்தில் பொதுமக்களிடையே காவலர்கள் தவறாக நடக்க வழி இல்லை என்ற அடிப்படையிலும் இந்த புதிய அபராதம் விதிக்கும் முறையை சென்னை காவல்துறையானது அறிமுகப்படுத்தியுள்ளது.

Related Stories: