தஞ்சை ஆர்டிஓவுக்கு ஊசிப்போன பன்னீர்பட்டர் மசாலா: பிரியாணி கடைக்கு நோட்டீஸ்

தஞ்சை: தஞ்சாவூர் ஆர்.டி.ஓ. வேலுமணி உள்ளிட்ட சில அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அருளானந்த நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரியாணி சென்டருக்கு சாப்பிட சென்றனர். அப்போது ஆர்.டி.ஓ., பன்னீர் பட்டர் மசாலா கிரேவியை ஆர்டர் செய்து சாப்பிட வாங்கியுள்ளார். சாப்பிடும்போது ஊசிப்போன வாடை வந்துள்ளது. இதயைடுத்து ஆர்.டி.ஓ, அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்கும்போது சரியான பதில் சொல்ல மறுத்துள்ளதோடு, கிரேவி நன்றாக தான் உள்ளது. தவறாக கூற வேண்டாம் என ஊழியர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்செட்டான ஆர்.டி.ஓ., இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜனிடம் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் தலைமையிலான அலுவலர்கள் பிரியாணி சென்டரில் ஆய்வு செய்தபோது, பன்னீர் பட்டர் மசாலா கெட்டுப்போனதாக இருந்ததால், அதனை கீழே ஊற்றி அழித்தனர். அதன் பிறகு அங்கிருந்த உணவின் தரத்தை பரிசோதனை செய்து விட்டு ஊழியர்களை எச்சரித்து விட்டு சென்றனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி புஷ்பராஜ் கூறியதாவது: ஆர்.டி.ஓ.,வின் புகாரின் பெயரில், சம்மந்தப்பட்ட பிரியாணி சென்டருக்கு உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006, பிரிவு 32ன் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: