ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பு: இரயில்வே, வங்கி பணிகளுக்கு பொது தகுதி தேர்வு...மத்திய அரசின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு

டெல்லி:  இரயில்வே, வங்கி மற்றும் மத்திய அரசின் பணிகளுக்கு பொதுவான தகுதி தேர்வு நடத்துவதற்கான தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுவரை வங்கி, இரயில்வே மற்றும் மத்திய அரசின் பணிகளுக்கு தனித்தனியே ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை எழுத வேண்டும். இவற்றை ஒருங்கிணைத்து தற்போது தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது வேலை தேடும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒப்புதல் குறித்து மத்திய அரசு தெரிவித்திருப்பதாவது, தேசிய பொது தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தோர், மத்திய அரசின் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவர் தேர்வு பெற்ற நாளிலிருந்து பணிக்கு செல்ல 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான பாடங்கள் பொதுவானதாகவும், தரநிலைப்படுத்தியதாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பன்முக ஆள்தேர்வு முகமைக்கு அளிக்கப்படும். மேலும் அரசு மற்றும் தனியார் துறைகள் பலவும் விருப்பத்தின் அடிப்படையில், இதனை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories: