நள்ளிரவில் அதிபர், பிரதமர் துப்பாக்கிமுனையில் கைது மாலியில் ராணுவ புரட்சி

* ஆட்சி, நாடாளுமன்றம் கலைப்பு; விரைவில் தேர்தல் நடத்த முடிவு

பமாகோ : மாலி நாட்டில் அதிபர் இப்ராகிம் பபுபக்கர் கெய்தா மற்றும் பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரை துப்பாக்கி முனையில் கைது செய்த ராணுவம், ஆட்சியை கலைத்தது. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் அதிபராக இப்ராகிம் பபுபக்கர் கெய்தாவும், பிரதமராக மெய்கா பவ்பு சிசேவும் பதவி வகித்து வந்தனர். கடந்த 2013ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான பபுபக்கர், கடந்த 2018ல் நடந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று 2வது முறையாக அதிபரானார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இதற்கிடையே, அவருக்கு எதிராக அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பபுபக்கர், இதற்கு முன் மாலி நாட்டை ஆட்சி செய்த பிரான்சுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது எதிர்ப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை.

இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், பபுபக்கர் ஆட்சி விலக வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர். இதனால், நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. மக்களை காப்பதற்கான தேசிய குழு என்ற பெயரில் ராணுவ மேஜர் இஸ்மாயில் வாகு தலைமையிலான ராணுவ படையினர் தலைநகர் பமாகோவை சூழ்ந்தனர். அதிபர் பபுபக்கர் வீட்டின் முன்பாக துப்பாக்கியால் வானில் நோக்கி சுட்ட ராணுவ வீரர்கள் வீட்டை முற்றுகையிட்டனர்.

அதிபர் பபுபக்கர், பிரதமர் சிசே கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பபுபக்கர் அரசு டிவி சேனலில் பேட்டி அளித்தார். அதில் அவர், ‘‘என்னை அதிகாரத்தில் அமர வைக்க யாரும் ரத்த சிந்த நான் விரும்பவில்லை. அதிபர் பதவியிலிருந்து விலக முடிவு செய்து விட்டேன். எனவே எனது அரசும், நாடாளுமன்றமும் கலைக்கப்படுகிறது’’ என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தலைநகர் பமாகோ நகர வீதிகளில் ராணுவ வீரர்களும், அரசின் எதிர்ப்பாளர்களும் கொண்டாடினர். ராணுவ புரட்சிக்கு பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஐநாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து ராணுவ புரட்சிக்கு தலைமை வகித்த மேஜர் இஸ்மாயில் வாகு அளித்த பேட்டியில், ‘‘அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. மக்களுடன் ஒன்றாக நின்று, நாட்டை அதன் முந்தைய மகத்துவத்திற்கு மீட்டெடுக்க வேண்டும். எனவே விரைவில் தேர்தல் நடத்தப்படும்’’ என அறிவித்தார். ராணுவ புரட்சியால் தற்போது மாலியில் அதிகார வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

2012ல் நடந்த இதே சம்பவம்

கடந்த 2012ல் அதிபர் அமாடு தவுமணி தாரே ஆட்சியும் இதே போல ராணுவ புரட்சியால் கலைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஐஎஸ் மற்றும் அல் கொய்தா தலைமையிலான தீவிரவாத அமைப்புகள் மாலியில் மீண்டும் ஒன்றிணைந்து வடக்கு பகுதி நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. பின்னர் பிரான்ஸ் தலைமையிலான படைகள் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கின. ஆனால் அதன் பிறகும் தீவிரவாத அமைப்புகள் மாலியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலை தீவிரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: