புதிய கண்டுபிடிப்புக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் சென்னை ஐ.ஐ.டிக்கு தர வரிசையில் முதலிடம்

புதுடெல்லி: புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தேசிய தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகம் மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை இணைந்து அடல் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகின்றன. இது கண்டுபிடிப்புகளில் சாதனை நிகழ்த்தும் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை ஆகும். மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி அளிக்கும் தன்னாட்சி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரிவின் கீழ் இந்த தர வரிசை தீர்மானிக்கப்படுகிறது.

இதில் மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி முதல் இடம் பெற்றுள்ளது. மும்பை ஐ.ஐ.டி இரண்டாம் இடமும், டெல்லி ஐ.ஐ.டி மூன்றாம் இடமும் பெற்றுள்ளன. சமீபத்தில் என்.ஐ.ஆர்.எப் என்கிற உயர்கல்விக்கான தேசிய தர வரிசையிலும் சென்னை ஐஐடி முதல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மாநில அரசின் நிதி பெறும் தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புனேவின் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் முதலிடத்தையும், கர்நாடகா பிஇஎஸ் பொறியியல் கல்லூரி 2ம் இடத்தையும், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 3ம் இடத்தையும் பெற்றுள்ளன. தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) மூன்றாம் இடத்தை பிடித் துள்ளது.

Related Stories: