பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்: நாட்டில் நிலவி வரும் பிரச்சனைகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல்

டெல்லி: டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம்  நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்திற்கான, ‘புதிய கல்விக் கொள்கை -2020’க்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் போன்ற அம்சங்கள் பல மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன.

இதனிடையே கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் முயற்சியில் அரசின் தடுப்பு நடவடிக்கை போதுமானதாக உள்ளதா? அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியா-சீனா இடையிலான பிரச்சினையை தீர்க்க இருதரப்பிலும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் சீனா இதற்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

எல்லை பிரச்சினையை தீர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதையை கடைப்பிடிப்பதுதான் சரியான வழி என்று சீனா எனவும் கூறியுள்ளது. இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை, லடாக் எல்லை பிரச்சனை, கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 10.30  மணிக்கு காணொலி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: