நெதர்லாந்து, பெல்ஜியத்திலிருந்து கடத்தி வந்த ரூ.1.65 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்: ஆந்திர இளைஞர் கைது

சென்னை: நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளிலிருந்து உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் என்று இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1.65 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர இளைஞரர் கைது செய்யப்பட்டார். மேலும், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆசாமி தலைமறைவாகிவிட்டார். துபாயிலிருந்து சரக்கு விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.

அதில் வந்த பார்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளிலிருந்து துபாய் வழியாக சென்னைக்கு வந்திருந்த 4 பார்சல்களும் இருந்தன. அந்த பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட பழங்கள், உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகளுக்கு அந்த பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த பார்சல்களில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டனர். அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதில் நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த 2 பார்சல்களில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் முகவரியும், பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த 2 பார்சல்களில் ஆந்திர மாநிலம் முகவரியும் இருந்தன. இதையடுத்து, சுங்கத்துறையினர் அந்த 4 பார்சல்களையும் உடைத்து பார்த்தனர். அதில் போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடர் பெருமளவு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய விலை உயர்ந்த எக்ஸ்டஸி என்ற போதை மாத்திரைகள் 5,210 இருந்தன. அதோடு மெத் பவுடர் எனப்படும் போதை பவுடர் 100 கிராம் இருந்தது. போதை மாத்திரைகள், போதை பவுடரின் மொத்த மதிப்பு ரூ.1.65 கோடி. இதையடுத்து சுங்கத்துறை வழக்கு பதிவு செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், சுங்கத்துறையின் தனிப்படையினர் காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சென்றனர். காஞ்சிபுரம் முகவரி போலியானது என்று தெரியவந்தது. ஆனால் ஆந்திர முகவரியில் இளைஞர் ஒருவர்  சிக்கினார். அவரை கைது செய்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவந்து மேலும் விசாரணை நடத்துகின்றனர். ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுபோல் வெளிநாடுகளிலிருந்து ரகசியமாக போதைப்பொருட்களை இறக்குமதி செய்து, இங்குள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த போதை மாத்திரை ஒன்றின் விலை ரூ.5 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இதனால் வசதியான மாணவர்கள், செல்வந்தர்கள்தான் இதை விலை கொடுத்து வாங்குவதாவும் தெரிகிறது. சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். காஞ்சிபுரத்தில் போலி முகவரி கொடுத்து தலைமறைவான ஆசாமியையும் தேடி வருகின்றனர்.

Related Stories: