குளித்தலை கடம்பர்கோவில் தேரோடும் வீதியில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை நகர மையப்பகுதியில் சிவ தலங்களில் பிரசித்தி பெற்றதும் காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் சிவாலயங்களில் ஒன்றான கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றி தேரோடும் வீதி உள்ளது. இந்த தேரோடும் வீதி வழியாகத் தான் கடம்பவனேஸ்வரர் கோவில் விழாக்களில் அனைத்து சுவாமிகளின் திரு வீதி உலா நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் தை மாதத்தில் எட்டு ஊர் சாமி சந்திக்கும் நிகழ்ச்சியும் தைப்பூச தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து மாசி மாதத்தில் மாசிமக தேரோட்டம் இந்த தேரோடும் வீதியில் தான் சென்று வருவது வழக்கம்.

மேலும் பல ஆண்டுகளுக்குமுன் திருச்சி கரூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டதும் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நகரத்திலிருந்து புறவழிச்சாலை செல்ல வேண்டுமென்றால் கடம்பர் கோவில் தேரோடும் வீதியை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் கடந்து செல்கின்றன. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் மூலம் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட வந்தபோது அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் அதிகாரிகளிடம் குளித்தலை கடம்பர் கோவில் தேரோடும் வீதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என்றால் முழுமையாக பழைய தார் சாலைகற்களை பெயர்த்து விட்டு அதன் பிறகு புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை கொள்ள வேண்டும்.

மேலோட்டமாக பறித்துவிட்டு ஜல்லியை போட்டு தார் சாலை அமைத்தால் கோவில் சுற்றி மழை தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். அதனால் முழுமையாக கற்களை அப்புறப்படுத்தி தான் தார்சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்த நிலையில் அதிகாரிகள் பணியை நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர் அன்றிலிருந்து இந்த தேரோடும் வீதியில் உள்ள தார் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் மீண்டும் நகராட்சி இடம் கேட்டதற்கு அதற்கான தொகை திரும்பி சென்று விட்டது என கூறியதாக கூறப்படுகிறது. தற்போது நகர் முழுவதும் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் குளித்தலை கடம்பர் கோவில் தேரோடும் வீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நகராட்சி நிர்வாகம் மீண்டும் முறையாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: