விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டம் 6 மாவட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: அக்.2ம் தேதி முதல் துவக்கம்

ஈரோடு: விளைநிலங்கள் வழியாக பெட்ரோல், டீசல் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்தக்கோரி 6 மாவட்ட விவசாயிகள் அக்டோபர் 2ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பாரத்  பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகந்தி வரை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக  பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த, நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளது.

இத்திட்டத்தை விளைநிலங்கள் வழியாக செயல்படுத்துவதற்கு பதிலாக சாலையோரங்களில் குழாய்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருவதோடு, பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அக்டோபர் 2ம் தேதி முதல் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறியதாவது: கெயில் திட்டமானது விவசாயிகளை பாதிக்கும் என்பதால், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திட்டத்தை ரத்து செய்தார்.

ஆனால் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடப்பதாக கூறிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எண்ணெய் குழாய் திட்டத்திற்கு அனுமதி வழங்கி விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கினை சாதகமாக பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த அரசு வேகம் காட்டி வருகிறது. எனவே வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் 6 மாவட்டங்களிலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து விவசாய சங்கங்கள், வணிக அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், மாணவர்கள், இளைஞர், மகளிர் அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள்,  அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு முனுசாமி கூறினார்.

Related Stories: