காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர்: சுற்றுலாவுக்காக பாக். எல்லையில் 600 கிமீ சாலை

ஸ்ரீநகர்: இயற்கையின் வரப்பிரசாதம் காஷ்மீர். பசுமையான இயற்கையும், பனிமலைகளும் கொண்டது. இதனால், இது உலகளின் நாடுகளின் விருப்பமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தீவிரவாதம் ஒருபுறம் இருந்தாலும், இதன் அழகை உயிரை பணயம் வைத்து ரசிக்க வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளம். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக இங்கு சுற்றுலா முடங்கி போயுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு, இப்பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே மிக உயரமான செனாப் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது, இப்பகுதியின் சுற்றுலாவை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளின் அருகே, 600 கிமீ தூரத்துக்கு நெடுஞ்சாலையை அமைக்க ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முடிவு செய்துள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டம் பற்றி, இதன் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் நேற்று அறிவித்துள்ளார். இது பற்றி அவர் அளித்த பேட்டியில், ‘‘ஜம்மு காஷ்மீரில் குல்மார்க் போன்ற சில இடங்கள் மட்டுமே பிரபலமாக இருக்கின்றன. இயற்கை எழில் மிகுந்த கேரன், குரேஜ், மச்சல் போன்ற பகுதிகள் இன்னும் பலரின் கவனத்துக்கு வரவில்லை.

இதுபோன்ற முக்கிய சுற்றுலாத்தளங்களை இணைக்க, பாகிஸ்தான் எல்லைக்கு அருகே 600 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. 13 சுரங்கப்பாதைகளுடன் இணைந்த சாலையாக இவை அமைக்கப்படும். ரூ.8 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், குல்மார்க், கார்கில், லடாக்கின் திராஸ் பகுதிகளையும் இணைக்கும். சாலை வசதிகளை மேம்படுத்திய பிறகு இவையும் பிரபலமான சுற்றுலாத்தளங்களாக மாறும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்,’’ என்றார்.

Related Stories: