வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத்தால் தமிழகத்தில் பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ஒடிசா மற்றும் வங்கதேச கடற்பகுதியை ஒட்டிய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டுள்ளதாலும், தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதாலும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் 390 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவக் காற்று மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் தீவிரம் அடைந்து நீலகிரி மாவட்டத்தின் மலைச் சரிவில் அதிக கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

மேலும், திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இது தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்யும். வங்கக்கடலில் காற்றழுத்தம் இருப்பதால் மன்னார் வளைகுடா பகுதியில் இன்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும். மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 60கிமீ வேகத்தில் காற்று வீசும். ஆகஸ்ட் 9ம் தேதி வரை அரபிக் கடல் மற்றும் கேரளாவை ஒட்டிய கடலோரப் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால்மேற்கண்ட இடங்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: