வேலூரில் வாட்ஸ் அப் குழு உருவாக்கி 2 மணி நேரத்தில் இ-பாஸ் தருவதாக விளம்பரம் செய்த வாலிபர் கைது: திருப்பூரை சேர்ந்த முக்கிய குற்றவாளிக்கு வலை

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ஊசூரை சேர்ந்தவர் 18 வயது வாலிபர். இவர் பிளஸ்2 முடித்துள்ளார். வேலூர் பெரிய அல்லாபுரத்தில் நாகலிங்கேஷ்வர் கோயில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இந்நிலையில் வாலிபர் ‘அணைக்கட்டு’ என்ற வாட்ஸ் அப் குழு உருவாக்கி, ‘2 மணி நேரத்தில் கலெக்டர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஒரிஜினல் இ-பாஸ் வழங்கப்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் இ-பாஸ் வசதி செய்து தரப்படும்’ என்று செல்போன் எண்ணுடன் விளம்பரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கும், எஸ்பி அலுவலகத்துக்கும் நேற்று புகார் சென்றது. இதையடுத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் வாலிபரின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது திருப்பூரில் உள்ள இ-பாஸ் வழங்கும் புரோக்கர் கும்பலிடம் கிடைத்த தொடர்பை பயன்படுத்தி வாலிபர் பணம் வசூலித்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் இருந்த லேப்டாப், ஆன்ட்ராய்டு போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வாட்ஸ் அப் குழுவில் இருந்த அணைக்கட்டு, ஊசூர், அரியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இ-பாஸ் வழங்குவதில் முக்கிய மூளையாக செயல்பட்ட திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரை தேடி தனிப்படையினர் திருப்பூர் விரைந்துள்ளனர். மேலும் திருப்பூர் வடிவேலுடன் வாலிபருக்கு தொடர்பு ஏற்படுத்தி கொடுத்த வேலூரை சேர்ந்த ஒருவரையும் தேடி வருகின்றனர்.

* வீட்டில் மைனர் பெண் மீட்பு

வாலிபர் கைது செய்யப்பட்ட வீட்டில் தாயும், தந்தையும் வேலைக்கு சென்றிருந்தனர். போலீசார் சென்றபோது வாலிபர், அவரது தங்கை மற்றும் ஒரு மைனர் பெண் வீட்டில் இருந்துள்ளனர். மைனர் பெண்ணிடம் விசாரித்தபோது, வாலிபரின் மனைவி என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த மைனர் பெண்ணையும் மீட்டு, பெண் போலீசார் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: