ஆலங்குடி கிராமத்தில் குறுவை நெற்பயிர்களை தாக்கும் தண்டு துளைப்பான் பூச்சி: நீடாமங்கலம் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராமசுப்ரமணியன் மற்றும் உதவி பேராசிரியர்கள் அனுராதா, ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் ஆலங்குடி கிராமத்தில் குறுவை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் ரகம் அம்பை-16 பயிர் செய்யப்பட்ட நடவு வயலில் ஆய்வு செய்தனர். ஆய்வில் நெல் பயிரை தாக்கக்கூடிய பூச்சி மற்றும் நோய் கண்டறியப்பட்டது. முக்கிய பூச்சியான தண்டு துளைப்பான் மற்றும் பாக்டீரியா இலை கருகல் நோய்கள் அதிகமாக தென்பட்டது. இந்த நோயானது அதிக காற்று, சூடான வெப்பநிலை மற்றும் காற்றுடன் கலந்த மழையில் எளிதில் ஒரு வயலிலிருந்து அடுத்த வயலுக்குப் பரவும்.

இந்த நோய்பரவாமல் இருக்க ஒரு வயலிலிருந்து அடுத்த வயலுக்கு தண்ணீர் பாய்ச்சகூடாது. இந்நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ரா சைக்ளின் கலவை 120 கிராம் உடன் காப்பர் அக்சிகுளோரைடு 500 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 2 கிராம் ஒருலிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்கவேண்டும். தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த சூரிய ஒளியில் இயங்கக்கூடிய தானியங்கி விளக்குப்பொறி அமைக்க வலியுறுத்தப்பட்டது. ரசாயன பூச்சிக் கொல்லிகள் முறையே ஹைட்ரோ குளோரைடு 2 கிராம் அல்லது குளார் பைரிபாஸ் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: