பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க முதுமலையில் இனபெருக்க மையம்

ஊட்டி: பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்கும் பொருட்டு தென்னிந்தியாவின் முதல் இனப்பெருக்க மையம் முதுமலையில் அமைய உள்ளது. வெண் முதுகு, கருங்கழுத்து, செந்தலை, மஞ்சள் முகம் என இந்த நான்கு வகைகளில் ஆயிரக்கணக்கான பாறு எனப்படும் பிணந்தின்னி கழுகுகள் தென்னிந்திய காடுகளிலும் காணப்பட்டன. கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு விலங்கினங்கள் இறந்திருந்தாலும், அந்த சடலத்தை உண்டு செரித்து மற்ற உயிர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் அசாத்திய திறன் கொண்டது இவ்வகை கழுகுகள். இதனாலேயே பிணந்தின்னி கழுகுகள் இயற்கை துப்புரவாளன் என அழைக்கப்படுகிறது.

இதனிடையே கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் டைக்ளோ பினேக் எனப்படும் வலிநீக்கி மருந்து, பிணந்தின்னி கழுகுகளின் அழிவுக்கு காரணமாக அமைந்தது. இதனால் தென்னிந்தியாவில் இவ்வகை கழுகுகள் அரிதாகி தற்போது 300  மட்டுமே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் செந்தலை அல்லது ராஜாளி எனப்படும் கழுகுகளின் 15 மட்டுமே உள்ளன. இவற்றின் கடைசிப் புகலிடமாக முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா ஆகிய இந்த மூன்று வனப்பகுதிகள் மட்டுமே உள்ளன. இவற்றை மீட்க அரசும், ஆய்வாளர்களும், தன்னார்வலர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறுகையில், சீகூர் பகுதியை பிணந்தின்னி கழுகுகள் வாழிடமாக கொண்டுள்ளன. இவற்றுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பாறு கழுகுகளின் இனப்பெருக்க மையம் ஒன்றை உருவாக்கத் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பாறு கழுகுகளை பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கும், என்றார். முட்டைகளை அடை வைத்து குஞ்சு பொரித்ததும் வனத்தில் விடவும், கூட்டில் இருந்து தவறி விழும் குஞ்சுகளை மீட்டு சிகிச்சை அளிக்கவும் வாய்ப்பாக அமையும். தென்னிந்தியாவில் பிணந்தின்னி கழுகுகளுக்கு இன விருத்தி மையம் உருவாக்கப்படவுள்ளது இதுவே முதல்முறை என அவர் கூறினார்.

Related Stories: