கொடுவிலார்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

ஆண்டிபட்டி: தேனி அருகே கொடுவிலார்பட்டி கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் அந்த கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். அந்த கிராமத்தின் வழியாக செல்லும் கழிவுநீர் வாறுகால் தூர்வாரப்படாததால் வாறுகால் குளம் போல் தேங்கி இருக்கிறது.

மேலும், கொடுவிலார்பட்டி கிராமத்தில் செயல்படும் கோழி இறைச்சிக் கடைகளில் இருந்து கழிவுகளை வாறுகாலில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டிற்கு பயன்படுத்தும் குப்பைகளை கழிவுநீர் வாறுகாலில் கொட்டுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கழிவுநீர் வாறுகால் தூர்வாரப்படாமல் இருப்பதால் செடிகள் வளர்ந்து வாறுகால் புதர்போல் காட்சியளிக்கிறது. கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி சுத்தம் செய்யமல் இருப்பதால் குடிநீரில் லார்வா புழுக்கள் உருவாகி கலந்து வருகிறது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,‘‘கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நோய்தடுப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் கொடுவிலார்பட்டி கிராமத்திற்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,’’என்றனர்.

Related Stories: