ராணிப்பேட்டையில் 20 வாடகை கார்களை அடமானம் வைத்து முறைகேடு!: தலைமறைவான மோசடி மன்னனை கைது செய்தது போலீஸ்..!!

ராணிப்பேட்டை: கொரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு வாங்கி அதனை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரே இந்த மோசடியில் ஈடுபட்டவராவார். ஓட்டுநரான இவர், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆற்காடு, சிப்காட், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோர்களிடம் கார்களை வாடகைக்கு எடுத்திருக்கிறார்.

முதல் 4 நாட்களுக்கு சரியான முறையில் வாடகை செலுத்திவிட்டு பின்னர், அலைக்கழித்துள்ளார். தொடர்ந்து, வாடகைக்கு எடுத்த கார்களை தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக அடகு வைத்து 70 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 20க்கும் மேற்பட்ட கார்களை இதேபோல் அடகு வைத்து உதயகுமார் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் வாடகைக்கு கார் வாங்கியவர்களிடம் தனித்தனியே குறுஞ்செய்தி மூலம் கார்களை அடமானம் வைக்கப்பட்டதை தெரியப்படுத்திவிட்டு செல்போன் எண்ணை சுவீட் ஆப் செய்துவிட்டு மோசடி மன்னன் தலைமறைவாகியுள்ளான்.

இது தொடர்பாக காரை பறிகொடுத்தவர்கள் புகார் அளித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார், உதயகுமாரின் மொபைல் சுவீட் ஆப் ஆன இடத்தை கண்டுபிடித்து அந்த பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், உதயகுமார் மீண்டும் காரை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட, அவரது நண்பர் ஒருவரின் உதவியை நாடுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணிப்பேட்டை பகுதியில் தலைமறைவாக இருந்த உதயகுமாரை கைது செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: