பருவமழையால் பாழ்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசின் அலட்சியப் போக்கினால் கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது வேதனை அளிக்கிறது.

ராஜேந்திரபட்டணம் என்ற இடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்திற்குச் சுற்றுவட்டார கிராமத்து விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்த நிலையில், அதனை உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கு வழியின்றி அங்கேயே அடுக்கி வைக்கச் செய்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். வெறுந்தரையிலேயே மூட்டைகளை அடுக்கியதால் அண்மையில் பெய்த கனமழையால், 20ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

18 சதவீதம் ஈரப்பதத்திற்குள் இருக்கும் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யும் வழக்கத்தைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடைப்பிடிப்பதால், மழையில் நனைந்த நெல் மூட்டைகளில் ஈரப்பதம் அதிகமாகிவிடுகிறது. அவற்றை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் எடுப்பதில்லை. விவசாயி விவசாயி என்று மூச்சுக்கு முந்நூறு தடவை தன்னைத்தானே கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, உண்மையான விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம் பற்றிய கவனமும் இல்லை, கவலையும் இல்லை என்பதால், இதனை அவர் பார்வைக்குக் கொண்டு வந்து, உரிய நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையையும் நலனையும் உரிய நேரத்தில் காப்பாற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

* டெல்லி அரசை போல வாட் வரியை குறையுங்கள்

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

டீசல் மீதான வாட் வரியை பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ.9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு. தமிழக அரசும் எரிபொருள் விலை குறைப்பை முயற்சிக்க வேண்டும். மாநிலத்தில் விலைவாசி குறைய உதவும். வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* அண்ணாசிலை அவமதிப்புக்கு கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம். தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள். குற்றவாளிகளைக் கைது செய்க. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: