பெரியார், எம்ஜிஆர், அண்ணா சிலைகள் அவமதிப்பு தொடர்கிறது..: குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை: பெரியார், எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோரின் சிலைகளை தொடர்ந்து அவமதிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை 3 சாலை சந்திப்பில் அமைந்துள்ள முழு உருவ அண்ணா சிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் காவித்துண்டு கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குழித்துறை போலீசார் அண்ணா சிலையில் கட்டி இருந்த காவி கொடியை அகற்றினர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அண்ணா சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பெரியார், எம்ஜிஆர், அண்ணா சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக கூறினார். இதில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு காரணமாக மூடும் முடிவு தற்போது இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்திருப்பது அத்தியாவசியமாக கருதப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மருத்துவக்குழுவினர் மற்றும் பல்வேறு நிபுனர் குழுவின் பரிந்துரையின் பேரில் இ-பாஸ் முறை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருவதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories: