பெருங்குளம் உண்டியலூர் பகுதியில் புதிய தொல்லியல்களம் கண்டுபிடிப்பு

ஏரல்: ஏரல் அருகே பெருங்குளம் உண்டியலூரில் புதிய தொல்லியல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அகழாய்வு செய்தால் தாமிரபரணி நதியின் பழங்கால போக்கும், மிக பழமையான குடியேற்றங்கள் இருந்ததிற்கான தடயங்கள் தெரியவரும் என சிவகளை ஆசிரியர் மாணிக்கம் கூறியுள்ளார்.

 வைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியரும், நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரலாற்று  துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவருமான சிவகளை மாணிக்கம் தனது ஆராய்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம், சிவகளை பரும்பு பகுதியில் தொல்லியல் ஆதாரங்களை கண்டுபிடித்தார். இதையடுத்து இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையினருக்கு அவர் தெரிவித்ததின் பேரில் சிவகளை பரும்பு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

இதில் அகழாய்வு கள அதிகாரிகள் பிரபாகர், தங்கத்துரை தலைமையில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிவகளை பரும்பு பகுதியில் 20க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  தென்பகுதியில் உள்ள வளப்பான்பிள்ளை திரட்டு பகுதியில் மக்கள் வாழ்விட பகுதியை கண்டுபிடிக்க தொல்லியல் துறை அதிகாரிகள் தோண்டி வரும் குழிகளில் இருந்து தமிழ் கிராவிட்டி எழுத்துடைய 5 பானை ஓடுகளின் துண்டுகள் மற்றும் உடைந்த நிலையில் பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஏரல் அருகே உள்ள பெருங்குளம் உண்டியலூரில் புதிய தொல்லியல் களத்தை ஆசிரியர் மாணிக்கம் நேற்று கண்டுபிடித்துள்ளார். இந்த கிராமத்தில் காணப்படும் பல்வேறு தொல்லியல் திரடுகளில் தொல்லியல் எச்சங்கள் அதிகளவு காணப்படுகின்றன.

இங்கு மேற்பரப்பு பகுதியில் ஆய்வு செய்த போது பல வகையான மண்பாண்ட பொருட்கள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இந்த மண்பாண்ட ஓடுகள் கருப்பு, சிகப்பு நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் மணல் அதிகமாக காணப்படுவதால் இந்த திரடுகளில் ஒரு காலத்தில் ஆறு ஓடியதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சிவகளையின் வடக்கே தாமிரபரணி பாய்ந்து ஓடியதற்கான தடயங்கள் பல காணப்படுகின்றன. ஏரலில் இருந்து பெருங்குளம் செல்லும் வழியில் வயல் சூழ்ந்த பகுதியில் உண்டியலூர் கிராமம் உள்ளது. ராஜராஜன் காலத்தில் தனக்கு முன் ஆட்சி புரிந்த சோழ மன்னன் உத்தம சோழன் பெயரால் 10ம் நூற்றாண்டில் இந்த பகுதி உத்தமபாண்டியநல்லூர் எனப்பட்டது. அதுவே உண்டியலூர் எனத்திரிந்துள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 50 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் இந்த பகுதியில் பழங்காலத்தில் உண்டியல்களின் உடைந்த பாகங்கள் அதிகம் காணப்பட்டதால் உண்டியலூர் என அழைக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் பழங்கால வலங்கைமகாசேனை எனப்பட்ட சோழர்களின் முதன்மையான படைப்பிரிவு இப்பகுதியில் இருந்தது என்றும், அப்படையின் குடியிருப்பு வளாகம் வளவம் என்று குறிப்பிடப்பட்டது.  வளவமும், போர்பயிற்சி களமும் இந்தத்திடலில் தான் இருந்தன. இந்த வலங்கை மகாசேனையால் வழிபட்ட காளி பெருங்குளம் குளத்து படுகையில் உள்ளது.

இதுகுறித்த செய்திகள் பெருங்குளம் திருவழுதீஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் உள்ளது. எனவே முக்கிய பகுதியாக கருதப்படும் இந்த உண்டியலூர் திரட்டு பகுதியினை தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொண்டால் கீழடியைவிட மிக பழமையான குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்கள் மற்றும் இப்பகுதியில் தாமிரபரணி ஆறு ஓடியதற்கான தடயங்கள் கிடைக்கும்’ என்றார்.

Related Stories: