ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் சம்மதம்: அரசுக்கு 3 நிபந்தனைகள் விதிப்பு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில அரசு 21 நாட்கள் அவகாசத்துக்கு பிறகு சட்டப்பேரவையை கூட்ட ஒப்புக் கொண்டால் அதற்கு அனுமதி அளிப்பதாக மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்‌ரா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, முன்னாள் துணை முதல்வர் பைலட் தரப்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூலை 24ம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் சி.பி. ஜோஷி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தாமதம் ஏற்படுவதால், சபாநாயகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு நேற்று திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையே, முதல்வர் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்டும்படி ஆளுநர் கல்ராஜ் மிஸ்‌ராவுக்கு 3 முறை கடிதம் அனுப்பினார். ஆனால் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வந்தார். ஆளுநரின் பாரபட்சமான இந்த நடவடிக்கையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள ராஜ் பவன் முன்பு காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

அதே நேரம், ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் கொரோனா பாதிப்பு, முக்கிய மசோதாக்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பேரவையை கூட்ட வேண்டும் என்றும் எந்த இடத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீர் திருப்பமாக நேற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப்பேரவையை கூட்டுவதற்கு 3 நிபந்தனைகளை விதித்துள்ளார். 21 நாட்கள் நோட்டீசுக்கு பிறகு பேரவையைக் கூட்ட மாநில அரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் பேரவை கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். இரண்டாவதாக, அவ்வாறு அவை கூடும் பட்சத்தில் அவை நடவடிக்கைகளை ஒலிபரப்ப அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பேரவையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிபந்தனைகள் அனைத்தும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் பேரவையைக் கூட்ட அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே, ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், சட்டப்பேரவை கூட்டும் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

* பகுஜன் சமாஜ் ஆதரவு வாபஸ்?

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரசில் சேர்ந்ததை ரத்து செய்யக் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ மதன் தில்வார் கடந்த வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அவரது மனு மீது சபாநாயகர் ஏற்கனவே பதில் அளித்திருப்பதால், மனுவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கெலாட் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தால், அதில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைமை 6 எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவை 6 எம்எல்ஏகள் ஏற்பார்களா என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: