தொடர் மழை எதிரொலி கொத்தயம் நல்லதங்காள் நீர்த்தேக்கம் நிரம்பியது: 40 கிராமமக்கள் மகிழ்ச்சி

பழநி: தொடர் மழையின் எதிரொலியாக பழநி அருகே கொத்தயம் நல்லதங்காள் நீர்த்தேக்கம் நிரம்பி உள்ளது.  பழநி அருகே கொத்தயம், தேவத்தூர், போடுவார்பட்டி, கள்ளிமந்தையம், காளிபட்டி உட்பட 40 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 1000 அடிக்கு போர்வெல் அமைத்தாலும் நீர் கிடைக்காத நிலை நிலவி வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் நீண்டதூரம் அலைந்து திரிய வேண்டியிருந்தது. இதுபோல் விவசாயமும் சரிவர செய்ய முடியாத சூழல் நிலவியது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் நல்லதங்காள் நீர்த்தேக்க திட்டம் கொண்டு வரப்பட்டது. மழைகாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை தேக்கி வைத்து 40 கிராமங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

சுமார் ரூ.18 கோடியில் 250 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேங்கும் வகையில் நீர்த்தேக்கம் உருவாக்கப்ப்டடது.  90% பணிகள் முடிவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக இத்திட்டத்தை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்தது. இதனால் நீர்த்தேக்கத்தின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் கரைகளில் முட்புதர்கள் தோன்றின. இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ சக்கரபாணி சட்டமன்றத்தில் பலமுறை வலியுறுத்தி பேசினார். இதன் எதிரொலியாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த புதர்கள் பொதுப்பணி துறையினரால் அகற்றப்பட்டன.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நல்லதங்காள் தடுப்பணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பி உள்ளது.  வரும் மழைகாலத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்கத்தில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்த்தேக்கத்தின் அருகில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல், இப்பகுதியில் உள்ள சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் வாய்ப்பு உண்டாகும் உள்ளது. 10 ஆண்டுகாலமாக திமுக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் காரணமாக நீர்தேக்கப்பணி நிறைவடைந்து தற்போது தண்ணீர் தேங்கி இருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: