மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பணியிடமாற்றம்: தமிழக அரசு திடீர் அதிரடி

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்ரமணியத்தை திடீரென பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு டிசம்பரில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நகர்ப்புற பகுதிகளில் தேர்தல் நடத்துவதிலும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை செய்யப்பட்டு, அந்த பகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளிலும் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் அனைத்து பணிகளும் முடங்கி போய் உள்ளன. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்ரமணியம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கே.பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த எல்.சுப்ரமணியம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, மறு உத்தரவும் கூட்டுறவு சங்கங்கள் நகை கடன்களை வழங்குவதை நிறுத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நகை கடன் வழங்குவது நிறுத்தப்பட்டால், விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு நகை கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை எனக்கூறி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த சூழலில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பணியிட மாற்றம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் நகை கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவிட்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: