தஞ்சை: அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் திருமணம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களது உறவினர்கள் கூறும்போது, தஞ்சையில் பாரம்பரியமிக்க குடும்பம் பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் தற்போது தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவருடைய மகன் ராமநாதன் துளசி அய்யா, இளைஞர் காங்கிரஸ் கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் டி.டி.வி.தினகரன்- அனுராதா மகளான ஜெயஹரிணிக்கும், ராமநாதன் துளசி அய்யாவுக்கும் திருமணம் செய்ய, பெங்களூரு சிறையிலிருந்தபடியே சசிகலா தனது உறவினர்கள் மூலம் பேசி முடித்துள்ளார்.
