நூதன முறைகளை கையாண்டும் பயனின்றி விவசாயிகள் கவலை
கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளைச் சோளம், கம்பு சிறுதானியங்களை தின்று அழிக்கும் படை குருவிகளை தடுக்க நூதன முறைகளை கையாண்டும் பயன் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த புரட்டாசி மாதம் முதல் வாரத்தில் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, வெள்ளைச் சோளம், மக்காச் சோளம், வெங்காயம், மிளகாய், கொத்த மல்லி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
விதைத்தவுடன் பெய்ய வேண்டிய மழை காலதாமதாக பெய்ததால் பயிர்களுக்கு வேண்டிய மேலுரம் மற்றும் களை பறிப்பு, பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தல் போன்ற பணியை செய்ய நிலத்தில் ஈரப்பதம் இல்லாததால் செய்ய முடியவில்லை.
பயிர் முளைத்து சுமார் 25 நாட்களுக்கு பின் மழை பெய்ததால் பயிர் வீரியமின்றி காணப்பட்டது. அதன் வளர்ச்சி காலம் முடிந்து தற்போது உளுந்து பாசி பூ பிடித்தும், சிறுதானியங்களான கம்பு, வெள்ளைச்சோளம், மக்காச்சோளம் கதிர் பிடித்து வருகிறது.
கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு மக்காச் சோளம் சாகுபடி பரப்பு சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் உயர்ந்துள்ளது. வெள்ளைச் சோளம், கம்பு சிறுதானிய பயிர்களின் கதிர்கள் பால் கோர்த்து மணிப் பிடித்து வருகிறது.
ஆண்டுதோறும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மார்கழி, தை மாதங்களில் குருவிகள் படை படையாக அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தானிய உணவு இரைதேடி லட்சக்கணக்கில் இப்பகுதிக்கு வருகின்றன. இக்குருவிகள் கதிரின் மீது அமர்ந்து வரிசையாக தானியங்களை முழுமையாக தின்று விடுகின்றன.
இக்குருவிகளை விரட்ட விவசாயிகள் பழைய டேப் ரெக்கார்டர் கேசட் இழைகளை பயிர்களில் கட்டியும், பட்டாசு சத்தம் மூலமும், தகர பாத்திரத்தில் ஓசை எழுப்பியும், சில விவசாயிகள் நாய் குரைப்பது போன்ற ஒலியை மெமரி கார்டில் பதிவு செய்து சிறிய ஒலி பெருக்கிகளை நான்கு மூலைகளிலும் கட்டி ஒலி எழுப்பி குருவிகளை விரட்டுகின்றனர். இவைகள் எதையையும் சட்டை செய்யாமல் நிதானமாக கதிரின் நுனியில் அமர்ந்து தின்று விட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் மேற்கு மலை நோக்கி சென்று விடுகின்றன.
கடந்த காலங்களில் கோவில்பட்டி, எட்டயபுரம், கடம்பூர், புதூர், விளாத்திகுளம் பகுதிகளில் மக்காச் சோளம் சாகுபடிக்கு இணையாக வெள்ளைச் சோளம், கம்பு, உளுந்து, பாசி சாகுபடி பரப்பு இருக்கும். அறுவடை சமயத்தில் மழை பெய்து விட்டால் வெள்ளைச் சோளம், கம்பு தானியங்கள் நிறம் மங்கி தரமற்று போய் விடுகிறது.
இதை சந்தையில் வாங்க மறுப்பதால் மக்காச் சோளம் சாகுபடியை அதிகமாக பயிரிட்டு உள்ளனர். குறைந்தளவு பரப்பில் வெள்ளைச்சோளம், கம்பு விவசாயிகள் கிராமங்களில் பயிரிட்டுள்ளதால் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
மக்காச் சோளம் சாகுபடியிலும் பன்றிகள் தொல்லையால் நிலங்களை சுற்றி வலை கட்டுவதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதுபோன்ற இன்னல்களிலிருந்து விடுபட முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
நீர் நிலைகள் தற்போது வரை பல கிராமங்களில் நிரம்பவில்லை. இச்சூழலில் தற்போது அவ்வப்போது காலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்படுகிறது. இதனால் மிளகாய், கொத்தமல்லி செடிகள் பூஞ்சான நோயினால் கடுமையாக பாதிக்கப்டுகின்றன. இதனால் கொத்தமல்லி விவசாயிகள் மிகவும் கவலையடைந்து உள்ளனர்.
இதனிடையே கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொட்டித்தீர்த்த மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்து ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் பணமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இத்தகைய இக்கட்டான சமயத்தில் நிவாரணத் தொகையை விடுவித்தால் பேருதவியாக இருக்கும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
