விவசாய நிலங்களை அழிப்பதால் மேலும் 11 வன மாவட்டங்களில் காட்டு பன்றிகளை சுட்டுத்தள்ள அனுமதி: அரசு ஆணை ஐகோர்ட்டில் தாக்கல்

சென்னை: விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை சுடுவது உள்ளிட்ட நடவடிக்கை 11 வன மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு ஆணையை தாக்கல் செய்து தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பட்டா நிலத்தில் காபி, தேயிலை, பிளம்ஸ், வேர்கடலை, பீட்ரூட், மிளகு, மலை பழம் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களை பயிர் செய்து வருகிறார்கள். இந்த பகுதி விவசாயிகளுக்கு காட்டுப் பன்றிகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இதையடுத்து, விவசாய நிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த காட்டுப் பன்றிகளை சுட உத்தரவிட வேண்டும் எனக்கோரி கொடைக்கானல் தாலுகா பூலத்தூர் கிராமத்தை சேர்ந்த சமூக சேவகர் ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், கொடைக்கானல் மலை பகுதியில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான காட்டுப் பன்றிகள் உள்ளன. இவை மலை எல்லைகளில் உள்ள கிராமங்களில் உள்ள விவசாயப் பயிர்களை அழித்துவருகின்றன. விவசாயத்தையே நம்பி வாழும் மலைக்கிராம மக்களுக்கு காட்டுப் பன்றிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.    இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘‘விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு வனச்சரகர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தலைமை வனவிலங்கு வார்டனுக்கு உள்ளது என்றும் இதை அமல்படுத்துமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.

 ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோகுலகிருஷ்ணன் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: தமிழக அரசு ஒரு அரசாணையை தாக்கல் செய்துள்ளது. அதில் விவசாய நிலங்களை அழித்துவரும் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்த அவற்றை சுடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நடவடிக்கைகளை திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ஓசூர், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 11 வன மாவட்டங்களுக்கு விரிவு படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசின் இந்த திட்டம் தொடரும் என்றும் விவசாய நிலங்களை அழித்து வரும் காட்டு பன்றிகளை அப்புறப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இந்த நீதிமன்றம் எதிர்பார்க்கிறது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: