கோவையில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அழிப்பு: 7 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறை நட்ட மரங்கள் தற்போது அடர்வனமாக காட்சி...!

கோவை:  கோவை நெடுஞ்சாலை துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மரங்கள் தற்போது அடர்வனமாக காட்சியளிக்கிறது. கோவையில் நெடுஞ்சாலை துறை விரிவாக்கத்திற்காக கடந்த 2012-2013ம் ஆண்டுகளில் அவிநாசி உள்ளிட்ட சாலைகளில் உள்ள மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. ஆனால், இதற்கு மாற்றாக நெடுஞ்சாலை துறையால், மரங்கள் ஏதும் நடப்படவில்லை. இதனால், ஈஸ்வரன் என்பவர் இதுதொடர்பாக வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக மரங்கள் நடவேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

அதன்படி 1500 மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், சின்னியம்பாளையம் அருகே, நெடுஞ்சாலையையொட்டி சுமார் 10 ஆயிரம் மரங்கள் நடப்பட்டன. 7 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட இந்த மரங்கள் தற்போது அடர்வனமாக காட்சியளிக்கின்றன. சின்னியம்பாளையம் அருகே அமைந்துள்ள சத்தியமங்கலம் சாலை உள்ளிட்ட இடங்களில் நெடுஞ்சாலை துறை அங்கங்கே மரங்களை நட்டுள்ளனர். அதாவது ஒருமரம் வெட்டப்பட்டால் 10 மரங்கள் நட வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், நெடுஞ்சாலைக்காக ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், இதுவரை 10 ஆயிரம் மரங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளன. எனவே, நெடுஞ்சாலை துறையால் வெட்டப்பட்ட மரங்களின் முழு விவரத்தை அறிவித்து, மரங்கள் போதுமான அளவு நட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கை தொடரப் போவதாக ஈஸ்வரன் என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: