தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது?... தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: தமிழகத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று திடீரென அறிவித்தார். நாடு முழுவதும் கொரோனா மற்றும் மழை வெள்ளம் காரணமாக வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் அடுத்த மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் நேற்று நீண்ட ஆலோசனை நடத்தினர். இதில், நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடத்த முடியாது என்றும், நேற்று நடத்த முடியும் என்றும் தேர்தல் ஆணையம் திடீர் பல்டி அடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் செப்டம்பர் 7ம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

ஆனாலும் தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது போன்ற பணிகளை துவங்கிவிட்டோம். செப்டம்பர் 7ம் தேதிக்கு பின்பு எப்போது தேர்தல் தேதி அறிவித்தாலும் தயார் நிலையில் இருக்கிறோம். தமிழகத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலை மாநகராட்சியே வழங்கலாம், இல்லை வழக்கம்போல் விண்ணப்பம் 7ஐ பூர்த்தி செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்கள் பெயரை நீக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: