இருதரப்பு மோதல் உச்சக்கட்டம் சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு: தகவல் திருட்டால் அதிரடி நடவடிக்கை

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை 3 நாள் மூட வேண்டுமென அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது இருதரப்பு மோதலின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, சீனா இடையே தொடங்கிய வர்த்தக போர், தற்போது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி கொளுந்து விட்டு எரிகிறது. கொரோனாவை பரப்பியது சீனா தான் என அதிபர் டிரம்ப் நேரடியாக குற்றம்ட்டினார். ஹாங்காங், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை சீனா கட்டுப்படுத்த முயற்சிப்பதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. சீன நிறுவனங்களின் 5ஜி தொழில்நுட்ப வர்த்தகத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை சீனா தனது ஹேக்கர்கள் திருடுவதாகவும் குற்றம்சாட்டியது.

அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளின் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை சீன ஹேக்கர்கள் திருடியிருப்பதாக அமெரிக்க நீதித்துறை பல தகவல்களை கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், உயர் தொழில்நுட்பங்கள், கேமிப் சாப்ட்வேர்கள் போன்றவற்றிலும் சீன ஹேக்கர்கள் நுழைந்து தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஹூஸ்டனில் செயல்பட்டு வரும் சீன தூதரகத்தை 3 நாளில் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தகவலை சீனா நேற்று வெளியிட்டது. தனது அறிவுசார் சொத்துரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் உச்சகட்டமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட 3வது மாகாணமான ஹூஸ்டனில் இருந்து தூதரகத்தை மூடுவது சீனாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கண்டித்து இருக்கும் சீனா, உடனடியாக இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ‘‘இந்த நடவடிக்கை அமெரிக்காவின் அரசியல் ரீதியிலான தூண்டுதலாக உள்ளது. சர்வதேச சட்டத்தை அமெரிக்கா மீறியுள்ளது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு தூதரக ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. மூர்க்கத்தனமான, நியாயப்படுத்த முடியாத சீன -அமெரிக்க உறவுகளை முறிக்கும் நாசவேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதற்கான சரியான பதிலடியை தருவோம்,’’ என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்க் வென்பின் தெரிவித்துள்ளார். எனவே, அமெரிக்காவுக்கு பதிலடி தர அடுத்ததாக ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க தூதரத்தை மூட சீனா நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* திடீர் தீ விபத்து; ஆவணங்கள் நாசம்

தூதரகத்தை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், ஹூஸ்டன் சீன தூதரகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தூதரக அலுவலகத்தில் இருந்து பயங்கர புகை வந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், யாரையும் உள்ளே சென்று சேத பாதிப்புகளை பார்வையிட அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த காட்சிகளை ஹாங்காங்க் டிவி சேனல் ஒன்று ஒளிபரப்பி உள்ளது.

Related Stories: