உ.பி.யில் மர்ம கும்பல் வழிமறித்து தாக்குதல் சுடப்பட்ட பத்திரிகையாளர் பலி: காட்டாட்சி நடப்பதாக தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மர்ம கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்ட பத்திரிக்கையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம் ஜோஷி. இவர் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 16ம் தேதி தனது மருமகளை ஒரு கும்பல் கேலி செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி தனது 2 மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் விக்ரம் சென்றார். காசியாபாத் அருகே அவரை மர்மநபர்கள் வழி மறித்து தாக்கினர். பின்னர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

அச்சத்தில் உறைந்த மகள்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை விக்ரம் இறந்தார். விக்ரம் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விக்ரம் ஜோஷி குடும்பத்துக்கு உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

* குண்டராட்சிதான் நடக்கிறது

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உ.பியில் ராம ராஜ்ஜியம் நடக்கவில்லை, குண்டர் ஆட்சிதான் நடக்கிறது,’ என்று குறிப்பிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ‘கொரோனா வைரசை விட குற்றவாளிகளின் குற்ற வைரஸ் மிக அதிகமாக செயல்பட்டு வருகிறது,’ என்று கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “நாட்டில் அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊடகங்களின் குரல்கள்  ஒடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

Related Stories: