ஆக்ஸ்போர்டு பல்கலை. தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவிலேயே பரிசோதித்து, உற்பத்தி செய்ய இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் முடிவு

லண்டன்: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்  அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள அடெநோவைரல் என்னும் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என ஆரம்ப கட்ட சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. இங்கிலாந்தில் முதல் கட்டமாக 1700க்கும் மேற்பட்டவர்களிடம் கடந்த ஏப்ரல் மாதம் பரிசோதனை அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. அது எந்தவிதமான எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது என்று நிபுணர்கள் ஆராய்ந்து வந்தனர்.

இதில், மருந்து உட்கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரது உடலிலும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் ஆட்ரியன் ஹில் தெரிவித்தார். இதற்கு அடுத்த கட்டமாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசிலில் உள்ள 10,000 பேருக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது கட்டமாக அமெரிக்காவில் 30,000 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கி சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில்,  ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள  தடுப்பூசி மருந்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்க உள்ளது. உலகிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வது சீரம் இன்ஸ்டிடியூட்தான். இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி குறித்து நல்ல விதமான செய்தி கிடைத்துள்ளது. இந்தியாவிலும் பரிசோதனைகளை நடத்த ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க இருக்கிறோம். மிக விரைவிலேயே அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவிலும் சோதனைகளை தொடங்கி, விரைவிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: