காரைக்குடி பகுதியில் வெட்டுக்கிளி தாக்குதல்: அதிகாரிகள் குழு ஆய்வு

காரைக்குடி: காரைக்குடி பகுதியில் செடிகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகள் குறித்து, தினகரன் செய்தி எதிரொலியாக வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கரபுரம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள எருக்கலை செடிகளில் வழக்கத்து மாறாக ஒவ்வொரு செடியிலும் 100க்கு மேற்பட்ட வெட்டுக்கிளிகள் காணப்பட்டன. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி நேற்று முன்தினம் வெளியாது. இதன் எதிரொலியாக சாக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் சண்முகஜெயந்தி, குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் விமலேந்திரன், செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பரமசிவம், வேளாண் அலுவலர் பிரியா பொன்காயத்திரி, துணை வேளாண் அலுவலர் மாணிக்கவாசகம், உதவி வேளாண் அலுவலர் கந்தசாமி ஆகியோர் கொண்டகுழு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தது.

வேளாண் உதவி இயக்குநர் சண்முகஜெயந்தி கூறுகையில், உலகளவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் உள்ளன. இந்தியாவில் 250 வகைகள் உள்ளன. இந்த வெட்டுக்கிளிகளை பொருத்தவரை எருக்கலை செடிகளில் தான் இருக்கும். அந்த செடியை சாப்பிட்டு அதிலேயே இனப்பெருக்கம் செய்யும். தற்போது காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் காரைக்குடி பகுதியில் எப்போதும் காணப்படுவது தான். வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து செய்தி வருவதால் மக்கள் பயப்படுகின்றனர். வயல்வெளி பயிர், தோட்டக்கலை பயிர்களை சாப்பிடாது. எருக்கலை இல்லாத பட்சத்தில் மற்ற களைச்செடிகளை சாப்பிடும். இதனைக் கண்டு விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.

Related Stories: